புதுடெல்லி: வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகருக்கு சொகுசு கப்பல் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.13) காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2014-ல் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றார். அப்போது முதல் வாரணாசி மற்றும் கங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் பிரதமர் அதிக கவனம் செலுத்திவருகிறார். இவற்றில் ஒன்றாக வாரணாசி முதல் அசாமின் திப்ரூகர் வரை ‘கங்கா விலாஸ்’ எனும் பெயரிலான சொகுசு கப்பல் நாளை முதல் இயக்கப்படஉள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் இந்திய உள்நாட்டு நீர்வழித்தட ஆணையத்தின் வாரணாசி அலுவலக துணை இயக்குநரான ராகேஷ் குமார் கூறும்போது, “இது உலகிலேயே அதிக தூரம் பயணிக்கும் சொகுசுக் கப்பலாக இருக்கும். இதன் பயண தூரம் சுமார் 4,000 கி.மீ. ஆகும். இத்தொலைவை உ.பி., பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அசாம் என 5 மாநிலங்கள் மற்றும் அண்டைநாடான வங்கதேசம் வழியாக 52 நாட்களில் கடக்கும். வங்கதேசத்தின் டாக்கா துறைமுகத்தை அடைந்த பின், பிரம்மபுத்ரா நதி வழியாக அசாம் மாநிலத்தின் திப்ரூகரை அடையும். இதற்கான ஆழமாக 1.5 மீட்டர் டிராப்ட் அளவைவருடம் முழுவதும் பாதுகாக்க வேண்டி உள்ளது. இந்த சொகுசுக் கப்பலை நிறுத்த இடமில்லாத ஊர்களில், பயணிகள் இறங்கி ஏறஅரசு படகுகள் கொடுத்து உதவும்” என்றார்.
பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கும் சொகுசுக் கப்பலை ‘ஹெரிடேஜ் ரிவர்ஸ் ஜர்னிஸ்’ என்ற தனியார் நிறுவனம் இயக்குகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜ் சிங், கூறும்போது, “ஐந்து நட்சத்திரஓட்டல்களில் இருக்கும் நீச்சல்குளம் தவிர மற்ற அனைத்து வசதிகளும் கங்கா விலாஸில் இடம் பெற்றுள்ளன. இது இந்திய தயாரிப்பாக கொல்கத்தாவில் கட்டமைக்கப்பட்டது. இதை எங்கள்நிறுவனத்தின் இயக்குநர் அன்னபூர்ணா கரிமேளா வடிவமைத்தார்.
எங்கள் நிறுவனத்தின் 4 சொகுசுகப்பல்கள் ஏற்கெனவே கொல்கத் தாவின் கங்கை மற்றும் பிரம்மபுத்ரா நதிகளில் ஓடுகின்றன. ஒடிசாவின் மகாநதியிலும் 4 கப்பல்கள் இயங்குகின்றன. கங்கா விலாஸ் எங்களது 9-வது சொகுசுக் கப்பல். இதன் மதிப்பு சுமார் 70 கோடியாகும்.
இதுபோன்ற சொகுசுக் கப்பல்களை நாங்கள் ஆந்திராவின் கோதாவரியிலும், சென்னையின் பங்கிங்ஹாம் கால்வாய் மற்றும் காவிரி நதியிலும் கூட விடத் தயா ராக உள்ளோம். பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தம் செய்தும், காவிரியை சீராக ஆழப்படுத்தியும் சொகுசுக் கப்பல்களை விடலாம். இதற்காக மத்திய, மாநில அரசுகளிடம் பேசிதிட்டம் வகுக்கலாம் என எண்ணுகிறேன்” என்றார்.
கங்கா விலாஸின் பயணத்திற்கு அன்றாடம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படுக்கை வசதியுடன் கூடிய 18 அறைகளை இக்கப்பல் கொண்டுள்ளது. நட்சத்திரவிடுதியில் கிடைக்கும் சர்வதேச உணவு வகைகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் 36 பயணிகள்இடம் பெறுகின்றனர். இவர்களுக்காக ஜெர்மன், பிரஞ்சு மொழிகள் அறிந்த வழிகாட்டி கங்கா விலாஸில் பயணம் செய்கிறார். இவர்களுக்கு வழியில் உலக பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்ற இடங்கள் உட்பட சுமார் 50 சுற்றுலா பகுதிகள் காட்டப்பட உள்ளன.
தொடக்க விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியகப்பல் போக்குவரத்து அமைச்சர்சர்பானந்த சோனோவால் ஆகி யோர் வாரணாசியின் கங்கை கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம்தலைமையில் நடைபெறுகின்றன.