தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி வாரிசு மற்றும் துணிவு என இரண்டு மிகப்பெரிய படங்கள் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளன. விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் சரிசமமான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், இரண்டு படங்களையும் தயாரிப்பு நிறுவனங்கள் தைரியமாக கோதாவில் இறக்கின. எதிர்பார்த்ததுபோலவே விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டி போட்டுக் கொண்டு பாக்ஸ் ஆஃபீஸில் கல்லா கட்டி வருகின்றன.
வாரிசு vs துணிவு
ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்ட துணிவு படம் நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் வெளியிடப்பட்டது. எதிர்பார்த்து போலவே தமிழகம் முழுவதும் இருக்கும் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. தாரை தப்படையுடன் படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவே கூடிய ரசிகர்கள் பட்டாளம், ரிலீஸை கொண்டாடி தீர்த்தனர். சென்னை ரோகிணி உள்ளிட்ட சில திரையரங்குகள் சேதாரத்துக்கு தப்பவில்லை. இது பாக்ஸ் ஆஃபீஸிலும் எதிரொலித்தது.
வாரிசை ஓரம் கட்டிய துணிவு
சரிசமமான தியேட்டர்களில் இரு படங்களும் ரிலீஸானாலும் கலெக்ஷனில் துணிவு முன்னணியில் இருந்து கொண்டு இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்ட துணிவு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், வாரிசு திரைப்படம் அதனைவிட குறைவாகவே கலெக்ஷன் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவிலும் மொத்த கலெக்ஷனில் துணிவு படமே முதலில் இருப்பதாகவும், வாரிசு படம் கலெக்ஷன் துணிவை ஒப்பிடும்போது சற்று குறைவு என முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் வந்தாலும், நேர்மறையான விமர்சனங்கள் அதிகளவில் வந்திருப்பதால் மக்கள் கூட்டம் திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றன. இன்னும் பொங்கல் விடுமுறை எஞ்சியிருப்பதால், இந்த கலெக்ஷன் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.