மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய மும்பையில் இருந்து நேவி மும்பைக்கு விரைவாக பயணிக்கும் வகையில் நாட்டின் மிகப்பெரிய கட்டும் பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்கு மும்பை – ட்ரான்ஸ் ஹார்பர் லிங்க் (Mumbai – Trans Harnour Link) பாலம் என பெயர் வைத்துள்ளனர்.
மும்பை டூ நேவி பாலம்
சுருக்கமாக MTHL பாலம் என்கின்றனர். இதன்மூலம் மத்திய மும்பையின் செவ்ரியில் இருந்து நேவி மும்பையின் சிர்லே வரையிலான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து வெறும் 15 நிமிடங்களாக குறைந்துவிடும் எனச் சொல்லப்படுகிறது. மேலும் லோனாவாலா, கந்தாலா மற்றும் மும்பை இடையில் பயண நேரத்தை 90 நிமிடங்கள் வரை குறைக்கும்.
ஓப்பன் ரோடு டோலிங் சிஸ்டம்
அதுமட்டுமின்றி மும்பை மற்றும் புனே இடையிலான பயண நேரமும் பெரிதும் குறையும். நாட்டிலேயே முதல்முறை ஓப்பன் ரோடு டோலிங் (ORT) சிஸ்டத்தை பெறவுள்ளது. இந்த திட்டம் மகாரஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலத்தின் சிறப்பம்சங்கள்
மும்பை – ட்ரான்ஸ் ஹார்பர் லிங்க் பாலமானது 6 வழிச் சாலையாக மொத்தம் 22 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதில் 16.5 கிலோமீட்டர் நீளமானது கடலுக்கு மேல் அமைந்துள்ளது.17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி (JICA) உதவியுடன் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் (MMRDA) செயல்படுத்தி வருகிறது.இதன் கட்டுமான வேலைகளில் எல் அண்ட் டி மற்றும் டாடா புரோஜக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.இந்த பாலத்தில் தினசரி 70 ஆயிரம் வாகனங்கள் வரை செல்ல முடியும்.ஓப்பன் ரோடு டோலிங் டெக்னாலஜி (ORT) வசதி இருப்பதால் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு பாலத்தின் எந்த ஒரு இடத்திலும் வாகனங்கள் நிற்க தேவையில்லை.இந்த பாலத்தில் ஆர்தோட்ரோபிக் ஸ்டீல் டெக் (OSD) எனப்படும் மிக நீண்ட இரும்பு தகடு பொருத்தப்பட்டுள்ளது. இது 180 மீட்டர் நீளமும், 2,300 மெட்ரிக் டன் எடையும் கொண்டது.பந்த்ரா – ஓர்லி கடலோர எட்டு வழி நெடுஞ்சாலை திட்டத்துடன் இணைக்கும் வகையில் MTHL திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மும்பை – ட்ரான்ஸ் ஹார்பர் லிங்க் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன. வரும் நவம்பர் 2023ல் பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.