வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பு
அமைச்சில் இடம்பெற்ற புத்தாண்டுக்கான கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கான முதலாவது இராஜதந்திர மாநாட்டிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2023 ஜனவரி 10ஆந் திகதி தலைமை தாங்கினார்.
2023ஆம் ஆண்டை சமூகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் மீட்சிக்கான ஆண்டாக இலங்கை நோக்குவதாக ஆரம்பத்தில் எடுத்துரைத்த அமைச்சர் சப்ரி, அதிக ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்த சவால்களுக்கு மத்தியில் மீட்சி மற்றும் முன்முயற்சிகளை நோக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் பல பகுதிகளை சுட்டிக் காட்டினார்.
விளக்கமளிப்பதற்கான இந் நிகழ்வில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.டபிள்யூ.ஏ. குமாரசிறி ஆகியோரும் பங்களித்தனர்.
2022 டிசம்பரில் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு, நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவின் செயற்பாடு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் வடமாகாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விஷேட பிரிவொன்றை ஸ்தாபித்தல் உள்ளடங்கலாக நல்லிணக்கம் தொடர்பாக அண்மைய மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களை அமைச்சர் சப்ரி வழங்கினார். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை அமைப்பதற்கும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விடயங்களைக் கையாளுவதற்கான அலுவலகத்தை செயற்படுத்துவதற்கும் அரசாங்கம் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, பயங்கரவாதத்திற்கு எதிரான விரிவான சட்டத்தை உருவாக்குவதில் தொடங்கப்பட்டுள்ள முன்னேற்றம், ஊழல் எதிர்ப்பு சட்டம், நீதி அமைச்சின் கீழ் வரும் நல்லிணக்க செயன்முறைகள் தொடர்பான விடயங்களிலான முன்னேற்றம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து நீதி அமைச்சர் இதன்போது விளக்கினார்.
2023 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அத்தியாவசியமான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள், எரிபொருள் அனுமதியட்டை மற்றும் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வலயங்களில் மின்வெட்டுக்களை நடைமுறைப்படுத்தாதிருத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விளக்கினார். குறிப்பாக பாதகமான பயண ஆலோசனைகளை திருத்துவது தொடர்பாக, நாட்டின் தற்போதைய நிலைமையை பிரதிபலிக்குமாறு நாடுகளை அமைச்சர் ஊக்குவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் விளக்கமளித்தார். பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு எடுக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டது.
மனித உரிமைகள் பேரவையின் தன்னார்வ மீளாய்வு செயன்முறையான உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுற்றின் கீழ் இலங்கை தனது தேசிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன தெரிவித்தார். தேசிய அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கையில், சிவில் சமூக அமைப்புக்கள் உட்பட உள்நாட்டுப் பங்குதாரர்களுடன் அரசாங்கம் பரந்த ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலை மேற்கொள்ளும் உணர்வுடன் ஈடுபடுவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக செயலாளர் விஜேவர்தன மேலும் குறிப்பிட்டார்.
விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தற்போதைய நிலைமை மற்றும் மீட்சி, ஸ்திரத்தன்மையை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்ட பயனுள்ள விளக்கங்களுக்கு இராஜதந்திர உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜனவரி 11