புதுடில்லி, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட, ௧௦ நாடுகளில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களுடைய வங்கிக் கணக்கை, யு.பி.ஐ., தளம் வாயிலாக பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தளம் வாயிலாக நாம் சுலபமாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ‘மொபைல்போனில்’ இதற்கான செயலியை பதிவிறக்கும் செய்து, நம் வங்கிக் கணக்கை மொபைல் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம். இதன் வாயிலாக பணம் இல்லாமலேயே எங்கும் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட உள்ளது. என்.ஆர்.ஐ.,க்கள் இங்குள்ள வங்கிகளில், என்.ஆர்.இ., அல்லது என்.ஆர்.ஓ., என்ற வங்கிக் கணக்கை வைத்துள்ளனர். இதற்காக, தாங்கள் தற்போது வசிக்கும் நாட்டில் உள்ள மொபைல்போன் எண்களையே பயன்படுத்துகின்றனர்.
இந்த வங்கிக் கணக்குகளை, இந்தியாவில் உள்ள மொபைல்போன் எண் இல்லாமலேயே, வெளிநாட்டு மொபைல்போன் எண் வாயிலாகவே, யு.பி.ஐ., பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி தற்போது வழங்கப்படுகிறது.
முதல்கட்டமாக, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் ஆகிய, ௧௦ நாடுகளில் உள்ள மொபைல்போன் வாயிலாக இந்த பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.
அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்துக்கு உட்பட்டு இந்தப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement