நொய்டா: உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்து உற்பத்திக்கு உ.பி. அரசு தடை விதித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மரியான் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட அம்ப்ரோனால், டோக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்துகள் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் உஸ்பெகிஸ்தானில் டோக்-1 மேக்ஸ் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்தது.
இதையடுத்து மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மருத்துவ வல்லுநர் குழு மரியான் பயோடெக் நிறுவனத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 29ல் ஆய்வு செய்து, மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோதனையின்போது டோக்-1 மேக்ஸ் இருமல் மருந்து தயாரிப்பு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க நிறுவனம் தவறி விட்டது. இதனால் அந்த மருந்தை உற்பத்தி செய்ய உ.பி அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையே, மரியான் பயோடொக் நிறுவன தயாரிப்புகள் தரநிர்ணய விதிகளை கடைப்பிடிக்கவில்லை. இந்நிறுவனத்தின் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.