தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15,599 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கே.கே நகர், மாநகர் போக்குவரத்து பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் என 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
முதல் நாளான நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 651 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 2,751 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் மூலம் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அரசு பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,855 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3,955 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,943 பேருந்துகளும் சேர்த்து மொத்தமாக 4,043 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணம் மேற்கொள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன் பதிவு செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.