தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பொங்கல் விழா சிறப்பு விருந்துக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகளை தொடர்ந்து இந்த வருடம் ஆதீனங்கள், கிருத்துவ பிஷப்புகள், முஸ்லிம் மத குருமார்கள், விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்கள், விவசாயிகள், தமிழ் ஆர்வலர்கள் என சுமார் 1,800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஜனவரி 15ம் தேதி உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நேரில் சென்று பார்வையிட உள்ளார்.
ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகளை மதுரை மாநகர் காவல் ஆணையர் நாகேந்திர நாயர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரில் காண இருப்பது மதுரை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.