ஆசியாவின் 2 வது பெரிய இலக்கிய திருவிழா கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது.
இந்த விழாவில் 12 நாடுகளில் இருந்து 400 பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், 2 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
4 நாட்கள் 5 அரங்குகளில் இந்த இலக்கிய திருவிழா, புத்தக கண்காட்சி நடக்கிறது. நேற்று மாலை இதனை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: கேரளாவில் ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் திரைப்பட விழா, கொச்சியில் கலாசார விழா, கோழிக்கோட்டில் இலக்கிய விழா நடத்துகிறோம். புத்தகம் படிப்பது எங்கு மறைந்தாலும் கேரளாவில் மறையாது. கோழிக்கோடு கலாசார கடற்கரை. இதன் மேம்பாட்டிற்கு ரூ.7 கோடி ஒதுக்கி உள்ளோம். இவ்வாறு பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது:
கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்று தமிழில் கூறுவோம். அதனை சிறப்பிக்கும் வகையில் இது போன்ற இலக்கிய விழாக்கள் தேவை. கோழிக்கோடு இலக்கிய நகரம் என இந்நகர மேயர் குறிப்பிட்டார். அதே போன்று பழங்கால சங்க இலக்கியம் தழைத்த மதுரை மாநகரின் எம்.எல்.ஏ. நான் என்பதில் பெருமை. தமிழ் இலக்கிய பெருமை வாய்ந்தது மதுரை. இலக்கியம் நமது கலாசாரத்தின் அடையாளம். அதனை நாம் காக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.
நோபல் பரிசு பெற்ற அடா யோனத், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா நாராயண மூர்த்தி, பாப் பாடகி உஷா உதுப் பேசினர்.
ஜன.15 வரை நிகழ்ச்சி நடக்கிறது. ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கியத் திருவிழாவாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பேசுகின்றனர்.
ஜன.15 ல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ‘நான் கண்டறிந்த அரசியல்’ என்ற தலைப்பில் பேசுகிறார். கேரள அரசு, மாநில கலாசார, சுற்றுலா துறை ஆதரவோடு டி.சி. புக்ஸ் நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
-நமது நிருபர்-
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement