தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3½ லட்சம் இழந்த என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் இன்ஜினியர் பாலன் (30). இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்த பாலன் நேற்று திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலனின் செல்போனை ஆய்வு செய்ததில் நண்பர் ஒருவருக்கு அதிகாலை குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் தனது தந்தையின் வங்கி கணக்கு அனுப்ப வேண்டிய 50 ஆயிரம் பணத்தை ரம்மி விளையாடிய தோற்று விட்டேன் என்றும், இதனால் என் முடிவை நானே தேடிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், பாலனிடம் அவரது தந்தை வங்கிக் கணக்கில் செலுத்த கூறி ஐம்பதாயிரம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை இரவு முழுவதும் ரம்மி விளையாடி இழந்துள்ளார்.
மேலும் கடந்த சில மாதங்களாக பாலன் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 3½ லட்சம் வரை பணம் இழந்ததால் பாலன் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.