புதுக்கோட்டை வேங்கைவயல் கிராம பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தை உலுக்கியது. இந்த சம்பவத்தில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படாததை கண்டித்து பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றியவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது போலீசார் குற்றம் சுமத்துவதாக பரபரப்பான குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு காவல்துறை தொல்லை கொடுத்து வருவதாக எவிடென்ஸ் அமைப்பு தலைவர் எவிடென்ஸ் கதிர் பரபரப்பாக பதிவு செய்து வருகிறார்.
எவிடென்ஸ் கதிர் தனது முகநூல் பதிவில், இந்த் வழக்கில் மொத்தம் 8 பேரினை தலித் தரப்பில் விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இரவு 12 வரை 3 நாட்கள் விசாரித்து உள்ளனர். இதில் 15 வயது சிறுவனும் விசாரிக்கப்பட்டு இருக்கிறான். இந்தியாவில் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க செய்து விசாரணை செய்வது இதுவே முதல் தடவை.
விசாரணையில் மலத்தை வரைந்து காட்டுங்கள் என்று கூறி இருக்கின்றனர். அது மட்டும் அல்ல, நீங்களே மலத்தை கொட்டிவிட்டு அடுத்தவர்கள் மேல் பழி போடுகிறீர்களா என்று என்று கேட்டு கொடுமை செய்து உள்ளனர். ஆபாசமாகவும் பேசி இருக்கின்றனர். வீடியோவை ஆன் செய்துவிட்டு பதிவு செய்யும்போது சிரித்து கொண்டும் வீடியோவை ஆப் செய்துவிட்டு மிரட்டியும் போலீசார் நடந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட அனைத்து தலித்துகளிடமும் வாக்குமூலம் பெற்று இருக்கிறோம். வேங்கைவயல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கிடைக்கவில்லை என்றால் ஆளுநர் எப்படி சட்ட மன்றத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டாரோ அதுபோன்று எங்கள் சேரியிலிருந்து கழகங்கள் விரட்டி அடிக்கப்படும் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு அறிவிப்பை வாசித்தார்.
அதில் அவர் கூறியபோது, அந்த கிராமத்திலுள்ள 32 வீடுகளுக்கும் 2 லட்ச ரூபாய் செலவில் முற்றிலும் புதிய இணைப்புக் குழாய்கள் மற்றும் குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டு, 5-1-2023 முதல் சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அதோடு, அங்கு ஒரு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 7 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறினார்.