பெங்களூரு: மத்திய இளைஞர் நலன் துறையும் கர்நாடக அரசும் இணைந்து ஜனவரி 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ‘தேசிய இளைஞர் விழா’வுக்கு ஏற்பாடு செய்துள்ளன. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான நேற்று கர்நாடகாவின் ஹுப்ளியில் இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
விழாவில் பிரதமர் பேசியதாவது: விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். கணிதம், அறிவியல், பொறியியல், தொழில், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தப் பிரதிநிதிகள் தங்களது திறமையை வெளிப்படுத்த விழா அடித்தளம் அமைத்துள்ளது.
உலக அளவில் அதிக இளைஞர் சக்தியை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய இளைஞர்களின் அறிவுத் திறனும், செயல் திறனும் உலக சிந்தனையாளர்களை ஈர்த்துள்ளது. இதனால் 21-ம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டு என்ற குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
இந்த நூற்றாண்டு, இந்திய இளைஞர்களின் நூற்றாண்டு. தாங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதற்காக இளைஞர்கள் ஓயாமல்உழைக்க வேண்டும். தீர்க்கமாக செயல்பட்டால் மிகவும் முன்னேறிய நாட்டைக்கூட நம்மால் முந்திவிட முடியும். எனவே இளைஞர்கள் எப்போதும் நேர்மறையானசிந்தனையோடு செயல்பட வேண்டும். இந்த தலைமுறை இளைஞர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். உலகளாவிய அளவில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குஇந்திய இளைஞர்களின் ஆற்றல் வளர்ந்துள்ளது. இளைஞர்களின் சக்தியே இந்தியாவின் உந்து சக்தியாக விளங்குகிறது. அதுவே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது. பொருளாதார வளர்ச்சி இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஹுப்ளி விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற ரயில்வே மைதானம் வரை சாலைமார்க்கமாக காரில் சென்றார். அப்போது 16 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பாதுகாப்பு படைவீரர்களை தாண்டி, மோடிக்கு அருகில் சென்று மாலையை நீட்டினார். இதனை பாதுகாப்பு அதிகாரிகள் தட்டி பறித்தனர். இதை பெற்ற மோடி அந்த மாலையை வாங்கி தனது காரில் வைத்தார்.