இந்தியா-இலங்கை 3-வது ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது

கொல்கத்தா,

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் காயமடைந்த மதுஷன்கா, பதும் நிசாங்கா ஆகியோர் நீக்கப்பட்டு நுவானிது பெர்னாண்டோ, லாஹிரு குமாரா இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி புதுமுக வீரர் நுவானிது பெர்னாண்டோவும், அவிஷ்கா பெர்னாண்டோவும் இலங்கை அணியின் இன்னிங்சை தொடங்கினர். அவிஷ்கா 20 ரன்னில் முகமது சிராஜியின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

2-வது விக்கெட்டுக்கு நுவானிது பெர்னாண்டோவும், குசல் மென்டிசும் ஜோடி சேர்ந்து அணியை தூக்கி நிறுத்தினர். 16.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை எட்டி நல்ல நிலையில் இருந்தது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது.

ஸ்கோர் 102-ஆக உயர்ந்தபோது குசல் மென்டிஸ் (34 ரன்) குல்தீப் யாதவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நுவானிது பெர்னாண்டோ (50 ரன், 63 பந்து, 6 பவுண்டரி) ரன்-அவுட் ஆக இலங்கை வீழ்ச்சி பாதைக்கு தள்ளப்பட்டது. சாரித் அசலங்கா (15 ரன்), கேப்டன் தசுன் ஷனகா (2 ரன்) ஆகியோரையும் தனது சுழல் ஜாலத்தில் குல்தீப் யாதவ் சாய்த்தார். இதற்கிடையே தனஞ்ஜெயா டி சில்வா ரன் ஏதுமின்றி நடையை கட்டினார். வெறும் 24 ரன் இடைவெளியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது. அப்போது இலங்கை 6 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து பின்வரிசை வீரர்களான ஹசரங்கா (21 ரன்), துனித் வெல்லாலகே (32 ரன்), சமிகா கருணாரத்னே (17 ரன்), கசுன் ரஜிதா (17 ரன்) ஆகியோர் அளித்த இரட்டை இலக்கம் பங்களிப்பால் ஒரு வழியாக இலங்கை 200 ரன்களை தாண்டியது. ஆனாலும் 50 ஓவர்களை நிறைவு செய்ய முடியவில்லை. அந்த அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 216 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியும் தடுமாறியது. கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்னிலும், சுப்மான் கில் 21 ரன்னிலும் வெளியேறினர். முந்தைய ஆட்டத்தில் சதம் விளாசிய விராட் கோலி ஏமாற்றம் அளித்தார். அவர் 4 ரன்னில், குமாராவின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஸ்ரேயாஸ் அய்யரும் (28 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை. அச்சமயம் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 86 ரன்களுடன் பரிதவித்தது.

இந்த நெருக்கடியான நிலைமையில் 5-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். ரன் தேவை குறைவாக இருந்ததால் பதற்றமின்றி விளையாடிய இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் (124 பந்து) எடுத்த நிலையில் பிரிந்தனர். பாண்ட்யா 36 ரன்னிலும் (53 பந்து, 4 பவுண்டரி), அடுத்து வந்த அக்ஷர் பட்டேல் 21 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

மறுபுறம் பொறுப்புணர்வுடன் செயல்பட்ட லோகேஷ் ராகுல் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ராகுல் 64 ரன்களுடனும் (103 பந்து, 6 பவுண்டரி), குல்தீப் யாதவ் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒட்டுமொத்த சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கையின் 437-வது தோல்வி (880 ஆட்டம்) இதுவாகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்திருந்த இந்தியாவை (436 தோல்வி) இலங்கை இப்போது மிஞ்சியுள்ளது. அத்துடன் இது இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் 95-வது தோல்வியாகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிகபட்ச தோல்வியை தழுவியிருந்த நியூசிலாந்தின் மோசமான சாதனையை (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 95-ல் தோல்வி) சமன் செய்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.