இவர்களின் குடும்பத்திற்கும் மாத ஓய்வூதியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஜன.12-ம் தேதி) நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “அயலகத் தமிழர்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்து, அயல்நாட்டிற்கு செல்லும் தமிழர்களுக்கு அடையாள அட்டை, காப்பீடு, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை என பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அயலகத் தமிழர் நாளான இன்று சில அறிவிப்புகளை மகிழ்ச்சியோடு நான் அறிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக, தமிழகத்திலிருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.

இரண்டாவதாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். மூன்றாவதாக, அயல்நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நான்காவதாக, அயல்நாடுகளுக்குச் செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிடுவதோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் தமிழ்ச் சொந்தங்களின் நலன் காத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.