உதகை மண்வள ஆராய்ச்சி மையத்தில் 370 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: 3 அதிகாரிகள் இடமாற்றம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் மண்வள ஆராய்சி மையத்தில் வனத்துறைக்கு சொந்தமான 234 ஏக்கர் வனப்பகுதியில் 370 மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக உதகை மையத்தின் தலைவராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உதகை அருகே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையம் 1955-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது.
image
இந்நிலையில், `மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் பகுதியில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு கீழே விழுந்த மரங்களை அகற்ற வேண்டும்’ என்று மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரி கண்ணனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை அதிகாரியின் பரிந்துரை கடிதம் உட்பட அரசு விதிகள் படி மரங்களை வெட்டிக் கொள்ளுமாறு பதில் அளித்துள்ளார். இதற்கிடையே கண்ணன் கடந்த செப்டம்பர் மாதம் நீண்ட விடுமுறையில் சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மழைக்கு கீழே விழுந்த மரங்கள் மட்டும் அல்லாமல், காப்புக்காடு பகுதியில் இருந்த மற்ற மரங்களையும் அனுமதி இன்றி வெட்டி கடத்தியுள்ளனர். காப்புக்காட்டில் இருந்த 370 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு உள்ளது.
image
இந்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகளும், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஒரு சிலரும் தனியார் காண்டிராக்டர் ஒருவரும் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து நடந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் ரூபாய் 48 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டது.
இந்நிலையில் வனச்சரகர் நவீன் குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி, வேட்டை தடுப்பு காவலர் தேவேந்திரன், தற்காலிக தோட்ட பராமரிப்பாளர் நாகராஜ் உள்பட 5 பேர் கடந்த 31.12.2022 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து டேராடூனில் உள்ள தலைமையகத்தில் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
image
இந்நிலையில், உதகை மண்வள மையத்தின் தலைவராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் டேராடூன் தலைமையகத்துக்கும், மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் அஸ்ஸாமுக்கும், மற்றொரு விஞ்ஞானி ராஜா ஒரிசாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் கண்ணன் மற்றும் ராஜா அதே நிறுவனத்துக்குள்ளும், மணிவண்ணன் மட்டும் மற்றொரு மத்திய அரசு நிறுவனத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.