ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவேரா திடீர் மரணம் காரணமாக அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் திமுக போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் காங்கிரஸ் தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு பிளாஷ்பேக்கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை 2011, 2016 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து 2 முறை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.
2011 தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016ல் அதிமுகவை சேர்ந்த கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். எனவே இந்த இடைத்தேர்தலில் அதிமுகவே நேரடியாக போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
கொங்கு மண்டல செல்வாக்குகடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் கோபிசெட்டிபாளையம், பவானி சாகர், பெருந்துறை, பவானி ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், மொடக்குறிச்சி தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜகவும் வெற்றி பெற்றது.
ஈரோடு கிழக்கு, மேற்கு, அந்தியூர் ஆகிய 3 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை காட்ட தங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தலாம் எனத் தெரிகிறது.
திமுக vs அதிமுகஇதற்கு போட்டியாக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை அல்ல. திமுக கோட்டை என நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையலாம். இதற்கிடையில் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று பாஜக கூறி வருகிறது. இங்கு தான் பாஜகவிற்கு வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), சரஸ்வதி (மொடக்குறிச்சி) என 2 பெண் எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
பாஜகவின் பிளான்சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், கடந்த காலங்களில் தமிழக பாஜக தனித்து போட்டியிட்டது. இனிவரும் காலங்களில் மீண்டும் அதை செய்ய தயங்காது. திமுக கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கிடையில் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.
2024 மக்களவை தேர்தல்இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரப் போகிறது. அதற்கு முன்னோட்டமாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வாய்ப்பாகவும் இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக தங்களுடைய ஆட்சியில் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எடப்பாடி வியூகம்அதேபோல் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். எனவே திமுக, அதிமுக நேரடியாக மோதுமா? அல்லது கூட்டணி கட்சிகளுக்கே போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது தேர்தல் தேதி அறிவித்த பிறகே தெரியவரும்.
உளவுத்துறை நோட்டம்இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரம் குறித்து உளவுப்பிரிவு போலீசார் விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 5ஆம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், ஈரோடு கிழக்கு தொகுதியில 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண்கள், மற்றவர்கள் 23 பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்.