அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இந்த சூழலில் ஓபிஎஸ், இபிஎஸ் அணுகுமுறைகளில் மாற்றம் இருக்கிறதா, இரு தரப்பும் என்ன நினைக்கிறது என்பது குறித்து விசாரித்தோம்.
சபையை புறக்கணிக்கும் எடப்பாடிசட்டமன்றத்தில் எதிர்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை கொண்டு வந்து தனது அருகில் வைத்துக் கொள்ளலாம், ஓபிஎஸ்ஸை பின் இருக்கைக்கு அனுப்பிவிடலாம் என எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டிருந்தார். சபாநாயகர் அதற்கு சம்மதிக்காத நிலையில் இதற்கு முந்தைய சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணித்து தனது எதிர்ப்பை காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
அறையிலேயே முடங்கிக் கொண்டது ஏன்?இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் சபாநாயகரிடம் வலியுறுத்தியும் பலனில்லை. கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை காட்டினார். இருப்பினும் மாற்றம் இல்லை. ஓ.பன்னீர் செல்வத்தின் அருகில் தான் அமர வேண்டும். இதனால் அவைக்கு வந்து சில நிமிடங்கள் இருக்கும் எடப்பாடி பழனிசாமி பின்னர் எழுந்து எதிர்கட்சித் தலைவர் அறைக்குச் சென்று மணிக்கணக்காக உட்கார்ந்து கொள்கிறார்.
ஓபிஎஸ் அளித்த விளக்கம்!இதனால் அதிமுகவுக்கு எதிரான கருத்துக்களை அல்லது அக்கட்சியை விமர்சித்து யார் பேசினாலும் ஓபிஎஸ்ஸே பதிலளித்து வருகிறார். நேற்று சேது சமுத்திர திட்டம் தொடர்பான விவாதத்தில் ஜெயலலிதா முதலில் ஆரம்பித்துவிட்டு பின்னர் நீதிமன்றத்திற்கு சென்று முட்டுகட்டை போட்டார் என்ற விமர்சனம் எழுந்தது. அதை சமாளித்து சேதுசமுத்திர திட்டத்தை ஆய்வு செய்து பாதுகாப்பாக கொண்டு வரப்பட வேண்டும் என்றே ஜெயலலிதா விரும்பினார் என்று ஓபிஎஸ் கூறினார்.
கோஷமிட்ட வேலுமணிகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வப் பெருந்தகை ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டை முன்வைக்கும் போது எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் கூட்டத்தோடு கோஷம் எழுப்பிய போதும் ஓபிஎஸ் கூறியது கவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் எழுந்து முறையாக ஆய்வு செய்து கொண்டு வரப்பட வேண்டும் என்பதே எடப்பாடியார் கொள்கை என்று அவர் பங்குக்கு பேசினார்.
முகம் பார்த்துக்கொள்ளாத இருவர்!ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் அருகில் இருந்தாலும் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. இருவரது ஆதரவாளர்களும் வெவ்வேறு திசையை பார்த்துக் கொள்கின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் இருவரும் ஆளுக்கொரு பக்கம் முறுக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஒற்றுமைக்கு நாங்கள் தயார்!ஓபிஎஸ் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து புகழேந்தி கூறியுள்ளார். “இது ஒண்ணும் உக்ரைன் – ரஷ்யா போர் இல்லை. சேர்ந்தால் தான் எதாவது பண்ண முடியுமே தவிர இல்லையென்றால் தொடர் தோல்விகளால் எதிரிதான் வெற்றி பெற முடியும் என்ற நிலைதான் இன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கிறது. பிரிவினையை மக்கள் விரும்புவதில்லை. ஒற்றுமைக்கு ஓபிஎஸ் தயாராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அணியினர் தான் தகராறு செய்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று பேசினார்.ஆரம்பம் முதலே ஓபிஎஸ் தரப்பு வெள்ளைக் கொடி காட்டி வரும் நிலையில் இபிஎஸ் தரப்பு அதை ஏற்குமா என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் தான் தெரிய வரும்.