சென்னையில் குடிபோதையில் ரகளை செய்த கணவரை மனைவி கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி வேல்முருகன் (40). இவரது மனைவி வினோதினி (37). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வினோதினி, கணவர் வேல்முருகனை காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் குடிபோதையில் கணவர் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக வினோதினி கூறியுள்ளார். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர் வேல்முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலில் கத்தி குத்து காயங்கள் இருந்ததால் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வினோதினியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், வேல்முருகன் சரியாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குடிபோதையில் வேல்முருகன் சாக்கடையில் விழுந்தவாறு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து வினோதினி வேல்முருகனை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டியுள்ளார். ஆனால் போதை தெளிந்ததும் மீண்டும் வேல்முருகன் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோதினி கத்தியை நெருப்பில் காய்த்து சூடு வைத்துள்ளார்.
இதில் வலி தாங்க முடியாமல் வேல்முருகன் மனைவியை தாக்கி, அவரது நடத்தை குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோதினி நெருப்பில் காய்ச்சிய கத்தியால் வேல்முருகனை சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிந்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால், பலத்த காயம் அடைந்த வேல்முருகனை வீட்டிலேயே வைத்து இரண்டு நாட்கள் விரோதினி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேல்முருகன் அசைவற்று கிடந்ததால், பயந்துபோன வினோதினி வேல்முருகனை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, கணவர் குடிபோதையில் தவறி விழுந்ததாக நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வினோதினியை கைது செய்தனர்.