கமுதி: கமுதி அருகே, தனியார் பஸ் மோதியதில் 32 செம்மறி ஆடுகள் பலியாகின. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கொல்லங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(65). ஆடுகள் வளர்த்து வரும் வயல்களில் கிடை போடும் தொழில் செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பகுதிகளில் தனக்கு சொந்தமான 110 செம்மறி ஆடுகளை சில தினங்களாக கிடை போட்டு கவனித்து வந்தார்.
இந்நிலையில் கிடை போடும் வேலை முடிந்ததையடுத்து, இன்று அதிகாலை கொல்லங்குளத்திற்கு ஆடுகளை ஒட்டி கொண்டு கிளம்பினார். கமுதி-முதுகுளத்தூர் சாலையில், பாக்குவெட்டி பெரியபாலம் அருகே வந்தபோது, அந்த வழியாக முதுகுளத்தூரில் இருந்து கமுதிக்கு சென்ற தனியார் பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் சென்ற ஆடுகள் மீது மோதியது. இதில் 32 ஆடுகள் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியாகின.
தகவலறிந்து வந்த பேரையூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பஸ் டிரைவர் நாகராஜ்(36) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.