சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி கரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து, கோட்டையை நோக்கி பேரணியாகச் சென்ற ஒப்பந்த செவிலியர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களில், 2,472 பேருக்கு கடந்த டிச.31-ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டது.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 1-ம் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சருடன் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், போராட்டம் தொடருமென செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று 11-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கரோனா பாதுகாப்பு முழு கவச உடை அணிந்து, தங்களுக்கு மாற்றுப் பணி வேண்டாம், பணி நிரந்தரம்தான் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேவைப்படும்போது செவிலியர்களை பணிக்கு எடுத்துவிட்டு, தேவை முடிந்த பிறகு அவர்களை பணியில் இருந்து விடுவிப்பது கண்டனத்துக்குரியது. கரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல், ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லை என்றால் தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, எழும்பூர் மேயர் ராமநாதன் சாலையில் இருந்து பேரணியாக கோட்டையை நோக்கிச் சென்ற செவிலியர்களை ராஜரத்தினம் மைதானம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படாததால், பேரணியை தொடர ஆரம்பித்தனர். இதையடுத்து போலீஸார், அவர்கள் அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைத்தனர்.