முன்னாள் மத்திய அமைச்சரும் , ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான சரத் யாதவ் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 75. காங்கிரஸ் கட்சி நிருவாகியும், சரத் யாதவின் மகளுமான சுபாஷினி சரத் யாதவ், டுவிட்டரில் சரத் யாதவ் காலமான செய்தியை உறுதிபடுத்தினார்.
பிரதமர் – ராகுல்காந்தி இரங்கல்
டெல்லியில் தங்கியிருந்த சரத் யாதவ் வயது முதுமையால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இல்லாமல் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் டெல்லியில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
— Narendra Modi (@narendramodi) January 12, 2023
சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “ஷரத் யாதவ் மறைவு வேதனை அளிக்கிறது. எம்.பி., அமைச்சர் என நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் அவர் தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவருடனான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், சரத் யாதவ் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் பதிவில், ” சரத் யாதவ் சோசலிசத்தின் தலைவராக இருந்ததுடன் அடக்கமான இயல்புடையவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
சரத் யாதவ் அரசியல்
சரத் யாதவ் மத்தியப் பிரதேசத்தில் கோசங்காபாத் மாவட்டத்தின் அக்மௌ கிராமத்தில், நடுத்தரக் குடும்பத்தில் ஜூலை 1, 1947-ல் பிறந்தார். இராபர்ட்சன் கல்லூரியிலும், ஜபல்பூர் பொறியியல் கல்லூரியிலும் கல்வி பயின்றார். கல்லூரி வாழ்க்கையில், டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இளைஞரணித் தலைவராகச் செயல்பட்டார். தொடர்ச்சியாக தன்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், பல்வேறு இயக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டார். 1969-70, 1972, 1975-களில் மிசாவின் கீழ் கைது செய்யப்பட்ட சரத் யாதவ், மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். 7 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.