புதுடெல்லி: சுவாமி விவேகானந்தரின் 160-வதுபிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “விவேகானந்தரின் சிறந்த லட்சியங்களும் கருத்துகளும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வழிகாட்டும். அவரது வாழ்க்கை, தேசபக்தி, ஆன்மீகம், அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் நமக்கு ஊக்கமளிக்கும்” என்று கூறியுள்ளார்.
விவேகானந்தர் தன்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி கர்நாடகாவில் தேசிய இளைஞர் விழாவையும் அவர் நேற்று தொடங்கி வைத்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட பதிவில், “சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள்! ஆன்மிகத்தையும் தேசபக்தியையும் ஒருங்கிணைத்த மிகப்பெரிய ஆளுமை அவர். இந்திய விழுமியங்களை அவர் உலகளவில் பரப்பினார். இளைஞர்கள் தங்களின் கனவுகளை பின்தொடரவும் பெரிய இலக்குகளை அடையவும் அவரது வாழ்க்கையும் போதனைககளும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய ஒற்றுமையின் உள்ளார்ந்த மதிப்புமீது சுவாமி விவேகானந்தர் நம்பிக்கைகொண்டிருந்தார். நமது மக்கள்,இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டும், காழ்ப்புணர்ச்சி மற்றும் வெறுப்புகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று ஆசைப்பட்டு கனவு காணும் வேளையில் சுவாமிஜியின் செய்தி நம் அனைவருக்கும், குறிப்பாக நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.