டோங்கிரி: பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற ஜம்முவின் டோங்கிரி கிராமத்திற்கு அமித்ஷா இன்று பயணம் மேற்கொள்கிறார். ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் டோங்கிரி கிராமத்திற்குள் கடந்த 1ம் தேதி புகுந்த 2 தீவிரவாதிகள் அப்பாவி மக்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த வீட்டின் அருகே தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில், சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனால், டோங்கிரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்திலலும் டோங்கிரி கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க பாதுகாப்பு படையினருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஜம்மு செல்கிறார். டோங்கிரி கிராமத்திற்கு செல்லும் அமித்ஷா அங்கு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷா ஜம்முவின் டோங்கிரி கிராமத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.