தமது அதிரடி பேச்சு, வித்தியாசமான அணுகுமுறையால் அனைவரின கவனத்தை ஈர்ப்பதில் தமிழக நிதியமைச்சர் பீடிஆர் பழனிவேல் தியாகராஜன் வல்லவர்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் என்ற மிக முக்கியமான பொறுப்பை ஏற்றதும், தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் கூட்டத்திலேயே மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என அழைத்து ஒற்றை வார்த்தையில் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தவர்.
அடுத்தடுத்து தான் பங்கேற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் தான் வெளிப்படுத்திய அதிரடியான கருத்துகளின் மூலம் பிற மாநிலங்களின் நிதியமைச்சர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கவுன்சிலில் தனித்துவத்துவம் வாய்ந்த அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எப்போதும் வெட்டு ஒண்ணு; துண்டு ரெண்டு என்ற தமது வெளிப்படையான பேச்சுகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தும் பிடிஆர், ஜிஎஸ்டி கவுன்சில் ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பு போல மாறிவிட்டதாக அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இப்படி அவரது பேச்சுகள் ஒருபுறம் பலதரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க, மறுபுறம் அவரது செயல்பாடுகளும் சமயத்தில் சாமானியர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் மதுரையில் அரசு மாநகர பேருந்தில் திமுக நிர்வாகிகளுடன் பயணித்து பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்திய அமைச்சர் பிடிஆர், இன்று சென்னையில் ஒரு சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் 2023 ஆண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் உரையாற்றினார். இன்றைய கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளியூரில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர், சட்டமன்றம் செல்வதற்கு சற்று தாமதமானது.
அத்துடன் பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் சென்னை ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை ஆகிய பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று அமைச்சருக்கு அவரது உதவியாளர்கள் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, மேற்கொண்டு தாமதம் ஆகாமல் சட்டமன்றத்துக்கு சென்றடைய வேண்டும் என்று எண்ணிய அமைச்சர், உடனே சமயோஜிதமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து, அங்கிருந்த மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றார்.
ரயில் நிலைய பணியாளர்கள், பயணிகள் உள்ளிட்டோர் அமைச்சரை வியப்பாக பார்தது கொண்டிருந்த வேளையில், விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய மெட்ரோ ரயிலில் அமைச்சர் பிடிஆர் சட்டென்று ஏறினார். அண்ணா சாலை -ஓமந்தூரார் தோட்டம் ரயில் நிலையம் வரை மெட்ரோவில் பயணித்த அவர், தமது சுமார் 30 நிமிடங்கள் பயணத்தின்போது தன்னுடன் பயணித்த பயணிகளுடன் சகஜமாக உரையாடினார்.
ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த தமிழ்நாடு சட்டமன்றம் அமைந்துள்ள தலைமைச் செயலகத்துக்கு காரில் பயணித்து சென்றார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.