உற்சாகத்தின் உச்சம்:
பொங்கல் விடுமுறையைக் குறிவைத்து நடிகர் அஜித்குமாரின் ‘துணிவு’ மற்றும் நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய படங்கள் கடந்த ஜன.11-ம் தேதி வெளியானது. ஒரே நாளில் தமிழ் சினிமாவின் இருபெரும் உச்ச நட்சத்திரங்களின் படங்களும் வெளியானதால், அவர்களது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்குச் சென்றனர். இதன் வெளிப்பாடாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் கட -அவுட்டுகள் வைக்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் இருக்கும் ‘ரோகிணி’ தியேட்டரில் இந்த இரண்டு படங்களும் வெளியானது. இதில் ‘துணிவு’ படத்தின் சிறப்பு காட்சி கடந்த 10-ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கும், ‘வாரிசு’ படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கும் வெளியானது. ‘துணிவு’ படத்தை பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே அஜித் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். அப்போது சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் -19 என்பவர் தனது நண்பர்களுடன் வந்திருந்தார்.
ரசிகர் பலி:
அஜித் ரசிகரான இவர் ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். முன்னதாக இங்கு அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி பயணித்தன.
அப்போது கொண்டாட்டம் தலைக்கேறிய பரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், அந்த வழியாக மெதுவாகச் சென்ற கன்டெய்னர் லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். பின்னர் பரத்குமார் கீழே இறங்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்தார். இதில் அவரின் முதுகு தண்டுவடம் உடைந்து உயிரிழந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான பரத்குமார், பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
களேபரம் வெடித்தது:
இதேபோல் ‘துணிவு’ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க ரோகிணி திரையரங்கில் குவிந்து இருந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தனர். அதில் நெருப்பு பொறிபட்டு அங்கு இருந்த விஜயின் ‘வாரிசு’ பட பேனர் லேசாகத் தீப்பிடித்தது. பதிலுக்கு ‘துணிவு’ படத்துக்காக வைக்கப்பட்டு இருந்த அஜித்தின் பேனர்களை, விஜய் ரசிகர்கள் கிழித்தனர். பின்னர் அங்கிருந்த கட் – அவுட்டுகளை மாறி, மாறி கிழித்துக்கொண்டனர். மேலும் தியேட்டரின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.
தடுக்க வந்த போலீஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு களேபரம் வெடித்தது. பின்னர் போலீஸார் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களைக் கலைத்து விட்டனர். இதேபோல் கோவை, திருச்சியிலும் பிரச்னை வெடித்தது. எனவே, இதற்கெல்லாம் யார்தான் பொறுப்பு என்ற கேள்வியும், புத்தாண்டு தினம் போல ஸ்டார் படங்கள் வெளியாகும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழர் முன்னணி பொதுச் செயலாளர் இமயம் சரவணன், “இதற்கு அரசும், அரசு சார்த்த நிறுவனங்களும், அமைச்சர் உதயநிதியும் தான் பொறுப்பு. தமிழ்நாடு அரசு முதலில் ‘ரசிகர் ஷோ’ காட்சிகளை நிறுத்த வேண்டும். ‘ரசிகர் ஷோ’ இல்லாமல் இருந்தால் இதுபோல் பிரச்னை ஏற்படாது. விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக வெளியிட்டிருக்கிறார். இரண்டு திரைப்படங்களுக்கும் சரிக்குச் சரியாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இங்கு ஒரேநேரத்தில் ‘ரசிகர் ஷோ’ வெளியிடப்பட்டிருக்கிறது. இது தமிழகத்தில் அஜித் – விஜய் இருவருக்கும் இடையில் பெரும் போட்டி நிலவிக்கொண்டிருக்கும் சமயம். இந்த நேரத்தில் யார் பெரிய ஆள் என்கிற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் உருவாக்குகிறார்கள். அதன் மூலமாக வருவாயைப் பெருக்குவதற்கு ஒரு உயிர் பலியாகியிருக்கிறது. திரையரங்குகளின் கண்ணாடி உடைத்திருக்கிறது. இதனால் அதன் உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
அளவுக்கு அதிகமான போலீஸ் பாதுகாப்பு:
மேலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு இதுபோல் பிரச்னை வரும் என்பது முன்கூட்டியே தெரியும். இருப்பினும் அதில்தான் அவர்களுக்கான வருமானம். இதை நாம் ஏற்றுக்கொள்ளவே கூடாது. ஆனால் ரசிகர் ஷோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறார்கள். இல்லையென்றால் ரசிகர்கள் அந்த திரையரங்குகளைப் புறக்கணிப்பார்கள். எனவே அரசு இதுபோல் செய்யக்கூடாது. பொங்கல் திருநாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை. இந்த நேரத்தில் கேளிக்கை காட்சிகளே இருக்கக்கூடாது.
கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் தான் நடத்தப்பட வேண்டும். அதற்கு அந்தந்த பகுதி மக்கள் கேட்கும் பட்சத்தில் திரையரங்குகளை வாடகைக்கு விட வேண்டும். இதற்குத் அரசு முனைப்புக் காட்ட வேண்டும். இவ்வாறு நடக்கும் விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பாரம்பரிய விழாக்கள் நடக்கும் காலத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடக்கூடாது. திரைப்படங்கள் வெளியான போது அளவுக்கு அதிகமான பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். இதையும் மீறி இந்த பிரச்சனை நடந்திருக்கிறது” என்றார்.
“பண்டிகை காலங்களில் நீண்ட விடுமுறை வருவதால், படங்கள் வெளியாவதை தடுக்க முடியாது. ஆனால் இது போன்று இரு பெரிய ஸ்டார் படங்கள் வரும்போது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திரையரங்குகளில் ரசிகர்கள் இடையே மோதல் நடப்பதை தவிர்க்க போதுமான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். கூட்டத்தில் பட்டாசு வெடிப்பது, கட்-அவுட்க்கு பால் அபிஷேகம் செய்வது போன்றவற்றை கட்டாயமாக தடுக்க வேண்டும். அதே போன்று காட்சி நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர்தான் திரையரங்குக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்க வேண்டும். அதிகாலை 4 மணி ஷோவுக்கு நள்ளிரவு முதலே கொண்டாட அனுமதிப்பதால் தான், கொண்டாட்டம் ஒரு கட்டத்தில் எல்லை மீறுகிறது. இது எல்லாவற்றையும் தாண்டி, திரை நட்சத்திரங்களும் தங்களின் ரசிகர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை அளிக்க வேண்டும். நல்ல விதமாக படத்தை பார்த்தால் மட்டும் போதும் என அவர்கள் ஸ்டைலில் சொல்ல வேண்டும். காரணம், அரசு போலவே , அவர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” என்கிறார்கள் நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர்.