பிரபல தொழிலதிபர் தினேஷ் சாப்டர் மரணம் தொடர்பில் உண்மையான தகவல்களை மறைப்பதற்கு பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறதா ? என்ற சந்தேகம் நிலவி வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் அவ்வாறு அழுத்தம் பிரயோகிப்போர் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மறைக்கப்படாத தகவல்கள்
ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வியெழுப்பிய போது, தினேஷ் சாப்டர் படுகொலை அல்லது மரணம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஏதாவது விடயங்கள் மறைக்கப்படுகின்றதா, பெருமளவு பணம் புழங்கப்படுகிறது.
தகவல்களை மறைப்பதற்காக பொலிஸார் அல்லது வேறு விசாரணை குழுக்களுக்கு பணம் அல்லது பரிசுகள் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் சமூகத்திலிருந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன ?என கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,
பொலிஸார் சிறந்த வகையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விசாரணைகளை பொலிஸார் தனித்து மேற்கொள்ளவில்லை.
அதில் நீதிமன்ற மருத்துவர் நேரடியாக சம்பந்தப்படுகிறார். அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளும் நேரடியாக சம்பந்தப்படுகின்றனர்.
பல்வேறு பொலிஸ் குழுக்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த விசாரணை நடவடிக்கைகளை பிரதேச ரீதியாக செயற்படும் பொலிஸ் பிரிவுகள், குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் மட்டுமன்றி சட்டமாஅதிபர் மற்றும் நீதிமன்றம் ஆகியன இணைந்தே மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இது பொலிஸார் மாத்திரம் தனித்து மேற்கொள்ளும் நடவடிக்கையல்ல. இதில், எதனையும் மறைப்பதற்கு பணம் வழங்கப்படுகிறதென்பதை முற்றாக நிராகரிக்கிறோம். எனினும் அவ்வாறான தகவல்கள் இருந்தால், ஆதாரத்துடன் ஒப்படைக்கவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.