‘திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளின் வாடகை உயர்த்தப்படவில்லை’ என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல் அலுவலர் தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக 50 – 100 ரூபாய் குறைந்த வாடகையில் அறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திருப்பதி மற்றும் திருமலையில் 7,500 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அறைகள் 120 கோடி ரூபாயில் வெந்நீர் மற்றும் பர்னிச்சர் வசதியுடன் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளின் வாடகை உயர்த்தப்படவில்லை.
நாராயணகிரி எஸ்பிஆர்எஸ் சிறப்பு ஓய்வு இல்லங்கள் நவீனப்படுத்தப்பட்டு விஐபி பக்தர்களுக்கு வாடகை உயர்த்தி வழங்கப்படுகிறது. சாதாரண பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும் அறைகளின் பராமரிப்பு மற்றும் மின் கட்டண செலவு ஒரு நாளைக்கு ஒரு 250 ரூபாய் ஆகிறது. பக்தர்களின் வசதிக்காக பிஎஸ்சி ஐந்து என்ற கட்டடம் 100 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது.
மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை வைப்பதற்காக 7,500 இலவச லாக்கர்கள் வைக்கப்பட்டு உள்ளன. 15 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு இலவச தங்குமிடம் வழங்கப்படுகிறது. அறைகள் தங்குமிடங்கள் லாக்கர்கள் கழிப்பறைகள், குளியலறை இலவசமாக வழங்கப்படுகின்றன.
ரங்கம்மா அன்னதான பவனில் தினமும் லட்சுக்கணக்கான பக்தர்களுக்கு 3 வேலை இலவச உணவு வழங்கப்படுகிறது. அறையில் இருந்து உணவு கூடத்திற்கு வர முடியாத பக்தர்களுக்கு அந்தந்த பகுதியிலேயே கவுண்டர்கள் திறந்து உணவு வழங்கப்படுகிறது.
திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி திருப்பதியில் காலடி எடுத்து வைத்தது முதல் சுவாமி தரிசனம் வரை பைசா செலவு இல்லாமல் தேவஸ்தானம் உணவு, குடிநீர் பால், டிபன், மருத்துவ சேவை, இலவச முடி காணிக்கை, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இலவச பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேட்டரி வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பக்தருக்கும் 1 லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு இலவச நவீன மருத்துவம் வழங்குவதற்காக 320 கோடி ரூபாயில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.