அய்யலூர்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே அய்யலூரில் வியாழக்கிழமைதோறும் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாதங்களாக குறைந்தளவே வியாபாரிகள் வந்திருந்ததால் அய்யலூர் ஆட்டுச்சந்தை களையிழந்தே காணப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று நடந்த அய்யலூர் ஆட்டுச்சந்தை, அதிகாலை 3 மணியில் இருந்தே களைகட்டியது. திண்டுக்கல், தேனி, திருச்சி, மதுரை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.8 ஆயிரம், சிறிய குட்டிகள் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது. பொங்கல் பண்டிகையின்போது அய்யலூர், வடமதுரை, எரியோடு பகுதி கிராமங்களில் கட்டுச்சேவல் சண்டை அதிக அளவில் நடைபெறும். இதற்காக கட்டுச்சேவல்கள் வாங்க ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். ஒரு கட்டுச்சேவல் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.380 முதல் ரூ.400 வரை விலை கேட்கப்பட்டது. அய்யலூர் ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாகவும், ஆனாலும் இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.