தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான சொத்துக்கள் பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்கள் பல ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் சொத்துக்களை மீட்ட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனி முருகன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 220 ஏக்கர் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சொத்துக்கள் அடையாளம் கண்டு மீட்பது தொடர்பான கூட்டத்தை வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டத்தை கூட்டி 15ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.