சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, இன்று, நாளை (ஜன.13,14) ஆகிய நாட்களில் நெரிசல் மிகுந்த மாலை நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில்கள் மூலமாகச் செல்ல தயாராகி வருகின்றனர். பேருந்துகளில் செல்ல கோயம்பேடு புறநகர்பேருந்து நிலையம், ரயில்களில் பயணிக்க, எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில்நிலையங்களுக்குச் செல்வார்கள்.
இந்த பயணிகள் நெரிசல் இன்றி எளிதாகச் செல்ல வசதியாக, நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. அதன்படி, ஜன.13,14 ஆகிய தேதிகளில் நெரிசல் மிகுந்த மாலை 5 மணி முதல் இரவு8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முனையங்களில் இருந்து செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவைஇரவு 11 மணிக்குப் பதிலாக,இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஜன.18-ம் தேதி மட்டும் அனைத்து முனையங்களில் இருந்து புறப்படும் முதல் மெட்ரோ ரயில்சேவை காலை 5 மணிக்குப் பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும். இந்த மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு ஜன.13, 14, ஜன.18 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இந்தத் தகவல் சென்னைமெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.