பொருளாதார சிக்கல் எதிரொலி; ராணுவத்தை குறைக்கும் இலங்கை.!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்தாண்டு ஏற்பட்ட மோசமான பொருளாதாரா நெருக்கடியால் மக்கள் வீதியில் இறங்கி போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார்.

நெருக்கடியை சந்தித்த இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டில் மட்டும் சுமார் 32 ஆயிரத்து 800 நிதியுதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. எரிபொருள் தேவை, அந்நிய செலாவணி கையிருப்பு, அத்தியாவசிய தேவைகள் என பலவற்றுக்கும் இந்த நிதியுதவியை இந்தியா பிரித்து வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன், சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு, வரி வருமானத்தை அதிகரித்தல், வாழ்க்கை செலவை கட்டுப்படுத்தல், வர்த்தக நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்த்தல், மின்சார பிரச்னை, மனித உரிமையை பாதுகாத்தல், தேர்தல் நடத்துதல், எதிர்ப்புக்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட புவிசார் அரசியல் ஆகிய பிரச்னைகளை இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது.

அதேபோல் அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவு, வரி சுமை, உர பிரச்னை, நாளாந்த மின்சார வெட்டு, வேலையின்மை பிரச்னை, கடன் வட்டி வீதம் அதிகரித்தல், மனித உரிமை மீறல்கள் ஆகிய பிரச்னைகளினால் இலங்கை மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

அதாவது, உணவு தேவைகளை நிவர்த்தி செய்தல், குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புதல், மாதாந்த கட்டணங்களை செலுத்துதல், கடன் தவணைகளை செலுத்துதல் ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதிலும் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ராணுவத்தை மூன்றில் ஒரு பங்கு குறைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 539 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தநிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் கூறும்போது, ‘‘இலங்கையின் ராணுவ பலம் தற்போது 200,783 ஆக உள்ளது. இதை மூன்றில் ஒரு பங்காக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் ராணுவ பலத்தை 1,35,000 ஆகவும், 2030க்குள் 1,00,000 ஆகவும் குறைக்கப்படும்.

வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், 2030ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்’’ என்று அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.