பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா துவங்கியது. சுற்றுலா பயணிகள் பார்த்து வியப்படைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார், வால்பாறை, டாப்சிபிப் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளதால், அங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், முதல் முறையாக வெப்ப காற்றழுத்த பலூன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் உள்ள ஒரு மைதானம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, இன்று முதல் சர்வதேச ராட்சத வெப்ப காற்றழுத்த பலூன் திருவிழா துவங்கப்பட்டது. இதில், முதல்நாள் நிகழ்ச்சியான இன்று அதிகாலையில், பொதுமக்கள் பார்வைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, பிரான்ஸ், வியட்நாம், தாய்லாந்து, பிரேசில், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வெப்ப காற்றழுத்தத்துடன் 10 ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று காலை நடந்த துவக்க நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு பார்வையிட்டார். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் சுற்றுலா பயணிகள் பலரும், வெவ்வேறு பலூனில் சுமார் 10 கி.மீ.,தூரத்துக்கு சுமார் 100அடிக்கு மேல் பறந்தபடி சென்றனர். பின் அந்த பலூன் அம்பராம்பாளையம் அருகே மற்றும் பொன்னாயூர் சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்காங்கே தரையிறங்கியது.
வானில் வட்டமிட்டபடி மிதந்து சென்ற, வெப்ப காற்றழுத்த ராட்சத பலூனை, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வியந்தனர். இதில், தமிழ்நாடு என்று எழுதப்பட்டிருந்த ராட்சத பலூனை பார்த்த பலரும் கைத்தட்டி உற்சாகமடைந்தனர். இந்த காற்றழுத்தபலூன் திருவிழா நாளை மறுநாள் 15ம் தேதி வரை நடக்கிறது.