மதுரை மாவட்டத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கிளீனர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு ஓட்டுநர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் இருந்து கரும்பேற்றுவதற்காக லாரி ஒன்று மதுரை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. இதில் கிளீனர் கோமதியாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (50) என்பவருடன், லாரியை நெல்லையை சேர்ந்த ஆரோக்கியம் என்பவர் ஓட்டி சென்றார்.
இந்நிலையில் லாரி திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் வந்தபோது, திடீரென எதிரே காய்கறி லோடு ஏற்றி வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் முன் பகுதியில் சேதமடைந்த நிலையில் கிளீனர் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இரண்டு லாரி ஓட்டுநர்களும் லாரியின் இடுப்பாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த ஓட்டுநர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.