சென்னை: தமிழகத்துக்கு வேலை செய்ய வரும் வெளி மாநிலத் தொழிலாளர் விவரம் குறிதத கணக்கெடுப்பு நடந்து வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு தருமபுரியில் தொழிலதிபரை கொலை செய்துள்ளனர்.
வட மாநிலத்தினர் ஒன்றரை கோடி பேர், தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. தமிழக அரசுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் குறித்து எந்த தரவும் தமிழக அரசிடமும், காவல்துறையிடமும் இல்லை என்றார்.
இது தொடர்பாக பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், “இத்துறை அலுவலர்கள் மூலம் வெளி மாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணி செய்வோர் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது” என்றார்.