வேலூர்: வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் போலீசாரின் சமத்துவ பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா வேலூர் நேதாஜி ஸ்ேடடியத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை பெண் போலீசாருக்கு கோலப்போட்டிகள் நடந்தது. மாலை 4 மணிக்கு 24 காவல் நிலையங்கள் சார்பில் பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டனர். கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். டிஆர்ஓ ராமமூர்த்தி, மேயர் சுஜாதா, திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் ஓடி விளையாடு பல்நோக்கு பயிற்சி மையம் சார்பில் மல்லர்கம்பத்தின் மீது இளைஞர்கள் உடலை வில் போல வளைத்து சாகசம் செய்தனர். தொடர்ந்து, நடிகரின் வேடமணிந்து நடனம், இசை கச்சேரி, பரதநாட்டியம், கரகாட்டம், தப்பாட்டம், உள்ளிட்ட பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் காவலர்களும் மேடையின் அருகே ஆடி, பாடி கொண்டாடினர். இறுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.