நொய்டா, உஸ்பெகிஸ்தானில்,21 குழந்தைகள் பலியானதை அடுத்து, இந்தியாவைச் சேர்ந்த, ‘மரியான் பயோடெக்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம்நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள மரியான் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், ‘டாக்1 மேக்ஸ்’ என்ற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது.
இது, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல்மருந்தை குடித்த, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 21 குழந்தைகள், கடந்த மாத இறுதியில் இறந்து விட்டன.
இதையடுத்து, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த இருமல் மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில், ‘எத்திலின் க்ளைக்கால்’ என்ற நச்சுப்பொருள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. நம் நாட்டிலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது:
இந்தியாவின் மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த, ‘அம்ப்ரோனல், டாக்1 மேக்ஸ்’ ஆகிய இருமல் மருந்துகள், உரிய தர நிர்ணய குறியீட்டை பூர்த்தி செய்யவில்லை. அதனால், இந்த மருந்துகளை யாரும் பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நொய்டாவில் உள்ள மரியான் பயொடெக் மருந்து தயாரிப்பு ஆலையில், மத்திய அரசு மற்றும்உ.பி., அரசு அதிகாரிகள்சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
அப்போது சர்ச்சைக்குரிய,’டாக்1 மேக்ஸ்’ இருமல் மருந்து குறித்த ஆவணங்களை, அங்குள்ளவர்கள் தர மறுத்து விட்டனர்.
இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை ஆய்வுக்குஉட்படுத்த முடிவு செய்துள்ளோம். சர்ச்சைக்குள்ளான இந்த மருந்தை, மரியான் பயோடெக் நிறுவனம் நம் நாட்டில் விற்பனை செய்யவில்லை.
உஸ்பெகிஸ்தானுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வந்தது. 45 நாட்களில் ஒரு லட்சம் பாட்டில்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்