கலிபோர்னியா,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் கைலே கோர்டி (வயது 31). இவருக்கு அதிக அளவில் பெண்கள் செய்தி அனுப்புகின்றனர். அதில், எங்களுக்கு குழந்தை வேண்டும். அதற்கு உதவ வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கும்.
நம்மூரில் உடல் உறுப்பு நன்கொடை, ரத்த கொடை உள்ளிட்ட கொடையாளர்கள் போன்று கைலே விந்தணு கொடையாளராக உள்ளார். இதனால், தேவைப்பட்ட பெண்களுக்கு வேண்டிய நேரத்தில் இந்த நன்கொடையை அளித்து வருகிறார்.
இதனை இவர் இலவச சேவையாகவே செய்து வருகிறார். இவரால் பயன் பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகம். உலகம் முழுவதும் இதுவரை 57 குழந்தைகளுக்கு அவர் தந்தையாகி உள்ளார். அடுத்து 14 குழந்தைகள் வர தயாராக உள்ளன.
ஒரு வித்தியாச பொழுதுபோக்காக இதனை மேற்கொண்டு வரும் இதுபற்றி கைலே கூறும்போது, குழந்தை இல்லாமல் போராடும் குடும்பத்தினருக்கு உதவும் நோக்கோடு இதனை இலவச அடிப்படையில் செய்கிறேன். பெண்கள் பலர் குழந்தை வேண்டுமென விருப்பம் தெரிவித்து எனக்கு அனுப்பும் செய்திகள் குவிந்து கிடக்கின்றன.
பிறருக்கு உதவுவதில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உள்ள தனக்கு, பாலியல் வாழ்க்கை என்பது சாத்தியம் இல்லாமல் உள்ளது என கூறுகிறார்.
அவர் கூறும்போது, இந்த விந்தணு நன்கொடை செய்வது தவிர்த்து, வேறு பாலியல் வாழ்க்கை என்பது தனக்கு இல்லை. வெளியே சென்று பாலியல் உறவு வைத்து கொள்ளாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த விந்தணுவை நான் பாதுகாக்க விரும்புகிறேன். அதனால், ஒரு சிறந்த கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பை அளிக்கிறேன்.
நன்கொடை அளிக்கும் வரை பாதுகாப்புடன் இருப்பதனால், விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதனால், நன்கொடைக்காக அதனை விடுவிக்கும்போது வெற்றி கிடைக்கிறது.
பல பெண்களுடன் சென்று பாலியல் உறவு வைத்து அதனால் தொற்று வியாதி ஏற்படும் ஆபத்து நிகழாமல் தவிர்க்கவும் இப்படி இருக்கிறேன். அதனால், எனக்கு என்று நிறைய பொறுப்புகள் உள்ளன என அவர் கூறுகிறார். பிறருக்கு உதவுவதற்காக டேட்டிங்கையே விட்டு கொடுத்து விட்டேன் என கைலே கூறுகிறார்.
இதுமட்டுமின்றி, குழந்தை கோரும் பெண்களிடம் பல கேள்விகளை அவர் கேட்கிறார். உங்களது பணி என்ன, மனநலம், நிதி நிலைமை மற்றும் பெற்றோர் ஆவதற்கான நோக்கங்களை பற்றி விசாரிக்கிறார்.
அந்த கேள்விக்கான கட்டங்களை நிரப்பும் பெண்கள் மற்றும் எந்த விவகாரமுமின்றி குழந்தைகளை கவனித்து கொள்ளும் பெண்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவுகிறேன் என கைலே கூறியுள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு அவர் சென்றிருக்கிறார். 3 பெண்களுக்கு நன்கொடை அளித்ததில் அவர்கள் கர்ப்பிணியாகி உள்ளனர்.
நாடு திரும்பியதும், மற்றொரு பெண்ணுக்கு நன்கொடை அளித்துள்ளார். இதனால், ஒரு மாதத்தில் 4 குழந்தைகளை நன்கொடையாக அவர் அளித்திருக்கிறார்.
உக்ரைன் பெண் ஒருவருக்கு உதவிய விசயங்களை நினைவுகூரும் கைலே, உக்ரைன் போர் தொடங்கிய முதல் நாளில் 30 வயதுடைய அலீனா என்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்த தகவலையும் தெரிவித்து உள்ளார்.
இந்த நன்கொடைக்காக நீண்ட தூர பயணத்தில் சலிப்படைந்த அவர், விருப்பமுள்ள நபர்கள் தன்னை தேடி வருகின்றார்கள் என்றால், அவர்களுக்கு உதவ அதிக ஆவலாக உள்ளேன் என்றும் கூறுகிறார்.
ஆனால், இது ஒரு ரோபோ வாழ்க்கை போன்று ஆகி விட்டது. எனது வாழ்க்கையில் தேவையான விசயங்களை எனக்கு செய்ய முடியாமல் போய் விட்டது. நன்கொடைக்காக பிரயாணம் செய்வதில் எனக்கு விருப்பம் அதிகம். அதுவே எனது முக்கிய பொழுதுபோக்காகவும் மாறி விட்டது. பெண்களுக்கு நான் தேவையாக இருக்கும்வரை இதனை நான் தொடர்ந்து செய்வேன் என ஒரு மனதுடன் கூறுகிறார்.
இதுபோன்ற தனது தனித்துவ மற்றும் வித்தியாச பொழுதுபோக்கை ஏற்று கொண்டு, தன்னையும் ஏற்று கொள்ள முன்வரும் பெண்ணை தனது வாழ்வில் வரவேற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.