ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையிலிருந்த பல பகுதிகளைப் படிக்காமலும், உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார். இது தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றின் மரபுகளை மீறிய செயல் என்பதாலும், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே போற்றும் தலைவர்களின் பெயர்களை படிக்காமல் தவிர்த்ததை அவைக் குறிப்பில் பதிவு செய்யும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு திருத்தத் தீர்மானத்தை கொண்டு வந்து, அது சட்டமன்றத்திலிருந்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். சட்டப்பேரவை வரலாற்றிலேயே, எந்த மாநிலத்திலும் நடைபெறாத நிகழ்வாக, தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறியது சர்ச்சைக்கு உள்ளானது. ஆளுநரின் இந்த செயலை, அவை மீறல் என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்த தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள், திமுக எம்பிக்கள், சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளித்தனர்.
ஆளுநரின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை விளக்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தமிழ்நாடு ஆளுநர் முக்கியமான அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவைகளை முட்டுக்கட்டைபோட்டு வருவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட மசோதக்களை தேவையற்ற சிறு காரணங்களைக் காட்டி சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பது அரசின் செயல்பாட்டு வேகத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நீதி மன்றத்தின் பணிகளையும் தன் கையில் எடுத்துக்கொண்டது போலாகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தை குடியரசுத் தலைவர் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தனது தரப்பை தெளிவுபடுத்தும் நிலையில் முதல்வர் ஸ்டாலினின் கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.