ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய சட்ட ஆணையத்திற்கு அதிமுக பதில் அனுப்பியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடக்கிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு தீவிரமடைந்துள்ளன.
ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே தேர்தல் நடத்துவது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால், மக்கள் ஒரே நேரத்தில் இரண்டு வாக்குகள் செலுத்த வேண்டியது இருக்கும். ஒன்று மாநில சட்டமன்றத்திற்கு, இன்னொன்று நாடாளுமன்றத்துக்கு. இதுபோன்று தேர்தல் நடத்துவதால் செலவு குறையும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படும் அதே வேளையில், இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டால், அப்போது மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் முழு ஆயுட்காலம் முடியும் முன்னரே கலைக்கப்படுமா அப்படி கலைக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையமும் தெரிவித்தது. இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம், தேசிய சட்ட ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள், அரசியல் கட்சியினர்களிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்கிறது.
அந்தவகையில் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ள சட்ட ஆணையம், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஜனவரி 16ஆம் தேதிக்குள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக தரப்பிலிருந்து தற்போது இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அதன் இடைக்கால பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி
சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது முதல் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.