கண்டாச்சிபுரம் ; கண்டாச்சிபுரத்தில் வளர்ப்பு நாய் கடித்து ஆட்டுக் கொட்டகையில் இருந்த 10 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் நல்லாப்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி வீரம்மாள் (30), இவர் அடுக்கம் காப்புக்காடு அருகே ஆட்டுக் கொட்டகை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு கொட்டகையில், கட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது 10 ஆடுகள் உயிரிழந்தும் பத்து ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த வீரம்மாள் குடும்பத்தாருக்கு தகவல் அளித்துள்ளார். பிறகு கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஆட்டுக் கொட்டகையின் அருகில் உள்ள நாராயணன் என்பவர் நாய்கள் வளர்த்து வருவதாகவும், அவரது நாய்கள் ஆடுகளை கடித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் குருபரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே வீரம்மாள் என்பவரது ஆட்டுக் கொட்டகையில் கடந்த டிசம்பர் மாதம் நாராயணன் என்பவரது வளர்ப்பு நாய் கடித்து 29 ஆடுகள் உயிரிழந்ததும், அதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு நாராயணன் என்பவர் வளர்ப்பு நாய் அதே பகுதியை சேர்ந்த வேறோரு ஆட்டுக் கொட்டகையில் புகுந்து 8 ஆடுகள் கடித்து உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் இதுபோன்ற சம்பவம் மூன்றாவது முறை நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.