காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் சரிவு முகமாகவே இருக்கிறது. கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சியில் சேருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், கடைசியாக குலாம் நம்பி ஆசாத் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார். ராஜஸ்தானில் தற்போது முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டை நீக்கிவிட்டு, இளம் தலைவர் சச்சின் பைலட்டை முதல்வராக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அசோக் கெலாட் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பதவியை ராஜினாமா செய்யவைப்பதாக கட்சியை பயமுறுத்தி தொடர்ந்து முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதாக அந்தக் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
குஜராத் தேர்தலையொட்டி, பிரசாரத்துக்கு வந்திருந்த அசோக் கெலாட், `சச்சின் பைலட் துரோகி, துரோகி முதல்வராக முடியாது’ என்று விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. சச்சின் பைலட் 2020-ம் ஆண்டு தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 20 பேருடன் பா.ஜ.க-வுக்கு செல்ல திட்டமிட்டு, டெல்லியில் முகாமிட்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் எப்படியோ, போராடி சச்சின் பைலட்டின் முயற்சியை முறியடித்து, `அடுத்த முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான்’ என்று கூறி சமரசப்படுத்தினர். அதனை சச்சின் பைலட்டும் ஏற்றுக்கொண்டு கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் ராகுல் காந்தி ராஜஸ்தான் வந்த போதுகூட அது வெற்றியடைய சச்சின் பைலட் தேவையான வேலைகளை செய்தார். ஆனால் ராகுல் காந்தி வந்துவிட்டு சென்ற பிறகும், தலைமை யுத்தம் ராஜஸ்தானில் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. 2018-ம் ஆண்டே காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் வெற்றி பெற்றபோது முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி நிலவியது. மூத்த தலைவர் என்ற முறையில் அசோக் கெலாட்டுக்கு அந்தப் பதவி கிடைத்தது. துணை முதல்வர் பதவி கொடுத்து சச்சினை காங்கிரஸ் சாந்தப்படுத்தியது.
களத்தில் தனியாக இறங்கிய சச்சின் பைலட் மாநிலம் முழுவதும் விவசாயிகள், இளைஞர்களைச் சந்தித்துப் பேச புறப்பட்டுவிட்டார். இதற்கு அவர் கட்சித் தலைமையிடம் அனுமதிகூட பெறவில்லை. ஆனால் இது குறித்து சச்சின் பைலட் தரப்பில் கேட்டதற்கு, “ஜோடோ யாத்திரை வந்து சென்ற மக்களிடமிருக்கும் ஊக்கம் சட்டமன்றத் தேர்தல் வரை குறையவிடக்கூடாது. அதனால்தான் இளைஞர்கள், தொண்டர்களைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றிருக்கிறார்” என்கிறார்கள்.
ஆனால், சச்சின் பைலட்டின் இந்த புதிய செயல் கட்சியில் மேலும் சிக்கலைத்தான் உருவாக்கும் என்று மூத்த அரசியல் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஏற்கெனவே மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் கட்சியின் அடிமட்ட வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். முதல்வர் அசோக் கெலாட் இறுதி பட்ஜெட்டை தயாரிக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். சச்சின் பைலட்டின் செயல் தேர்தலை கருத்தில் கொண்டிருப்பதாக தெரிகிறது என்கிறார்கள். ஜாட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சுற்றுப்பயணம் செய்ய சச்சின் பைலட் முடிவு செய்திருக்கிறார்.
“ஒருபக்கம், பா.ஜ.க ஆக்ரோஷமாக பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது. எனவே நாம் அமைதியாக இருக்க முடியாது” என்று சச்சின் பைலட் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரசாரத்துக்கு ராகுல் காந்தியின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாக சச்சின் பைலட் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது எழுந்திருக்கும் பிரச்னை குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “கட்சிக்கு பயனளிக்கும் வகையில் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரத்தில் தீர்வு காண்பார். கட்சிதான் முதன்மையானது. தலைவர்கள் வருவார்கள், போவார்கள்” என்று தெரிவித்தார். சச்சின் பைலட்டின் நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியும் கவலையடைந்திருக்கிறது. இந்த முறை சச்சினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லையெனில் அவர் புதிய ஜெகன் மோகனாக மாறுவாரா அல்லது வழக்கம்போல் பா.ஜ.க பக்கம் செல்வாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும் என்று ராஜஸ்தான் அரசியலை உற்றுநோக்குபவர்கள் தெரிவிக்கின்றனர்.