திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமையில் கோலாலமாக நடைபெற்றது, பாரம்பரிய முறைப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குடும்பத்துடன் வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழாவை கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி 20 க்கும் மேற்பட்ட மண் அடுப்புகள் அமைத்து மண்பானையில் பச்சரிசி இட்டு பொங்கலிட்டு கொண்டாடினர்.
மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி பூட்டி கொண்டு மாட்டு வண்டி பின் புறத்தில் பன்னீர் கரும்புகள் கட்டியபடி காவலர்கள் மாட்டு வண்டியில் அமர்ந்தபடி பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று ஆயுதப்படை மைதானத்தில் சுற்றி வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
அதேபோன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன், பெண் காவலர்கள் மற்றும் காவலர்களின் குழந்தைகள் உள்ளிட்டோர் கண்களை கட்டிக்கொண்டு உறியடித்து மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். முன்னதாக ஆயுதப்படை மைதான வளாகத்தில் பெண் காவலர்கள் தைத்திருநாளை முன்னிட்டு கோலப் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு விதமான கோலங்களை காட்சிப்படுத்தினர்.