நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடக்கம்: பிப்.1ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 2 கட்டமாக நடைபெறும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 23ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதிகளை ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அறிவித்தார். அதன்படி, பட்ஜெட் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடக்கும் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பார்.

முர்மு ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பின்னர் முதல்கட்ட பட்ஜெட் தொடர் பிப்ரவரி 14ம் தேதி நிறைவடையும். இதையடுத்து, 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர்  மார்ச் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்க உள்ளது.
கூட்டத் தொடர் 27 அமர்வுகளைக் கொண்டிருக்கும் என்றும், பட்ஜெட் ஆவணங்களை ஆய்வு செய்ய ஒரு மாத கால இடைவெளியுடன் ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கும் என்றும் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.