கரூர்: சேவற்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளநிலையில் பூலாம்வலசில் குவிந்த சேவல் உரிமையாளர்கள், பார்வையாளர்களை போலீஸார் லத்தியுடன் விரட்டி கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு சேவற்கட்டு மிக பிரபலம். கடந்த 2014ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை யொட்டி நடந்த சேவல்கட்டின் போது சேவல் காலில் கட்டப்பட்ட கத்திப்பட்டு இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து சேவல்கட்டு 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று பல்வேறு கட்டுப்பாடுகள் அடிப்படையில் சேவற்கட்டு நடத்தப்பட்டது.
தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சேவற்கட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு பூலாம்வலசு சேவற்கட்டு நடைபெற்றது. விதிகளை மீறி சேவல் காலில் கத்தி கட்டப்பட்டு சேவல்கள் மோதவிடப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீஸார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்தனர்.
போட்டியின் இறுதிநாளில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் (65), சேவல் சண்டையின் போது சேவல் காலில் கட்டப்பட்டு கத்திப்பட்டு படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சேவற்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பூலாம்வலசு சேவற்கட்டு கடந்தாண்டு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடந்தாண்டு பொங்கலின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடந்த சேவற்கட்டுகளை நடத்தியவர்கள், பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நிகழாண்டு சேவற்கட்டுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் விழா கமிட்டியினர் சேவற்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக செய்து வந்தனர். சேவற்கட்டு நடைபெறும் மைதானத்தை தயார் செய்து, சேவல் மோதவிடப்படுவதற்கான கீற்றுத் தடுப்புத் தடுப்பு, கூரைகள், சேவல் கொண்டு வருபவர்கள் உள்ளே செல்வதற்கு சவுக்கு கட்டைத் தடுப்புகள் அமைத்திருந்தனர்.
சேவற்கட்டுக்கு இன்று (ஜன.14) அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சேவல் சண்டை நடத்த அனுமதி அளித்த உத்தரவு ஏதும் வராததால் போலீஸார் பூலாம்வலசு பிரிவு சாலையில் பேரிகார்டு அமைத்து வாகனங்களை சோதனை செய்து வெளியூர்காரர்களை பூலாம்வலசு செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளூர் வாகனங்கள் பதிவெண், உரிமையாளர் பெயர், முகவரி ஆகிய விபரங்களை பெற்றுக் கொண்டு செல்ல அனுமதித்தனர்.
ஆனால், உள்ளூர்காரர்கள் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் போட்டி நடைபெறும் அருகே காத்திருந்தனர். சேவற்கட்டு செய்திகளை சேகரிப்பதற்காக பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களும் பூலாம்வலசிற்கு வந்திருந்தனர். இந்நிலையில் போலீஸார் மதியம் 12.30 மணிக்கு வாகன சோதனை நிறுத்திவிட்டு புறப்பட்டனர்.
உள்ளூர், வெளியூர்களிலிருந்து சேவற்கட்டில் பங்கேற்க இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சேவல்களுடன் வந்தவர்கள் சுமார் 1,000 பேர் வரிசையில் காத்திருந்தனர். விழா கமிட்டியினர் அவர்களை நாளை வரக்கூறி அறிவுறுத்திய நிலையில் கூட்டத்தினர் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கூச்சலிட்டவாறு இருந்தனர்.
இதையடுத்து ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் அங்கு வந்த அதிரடிப்படையினர் அங்கு கூறியிருத்தவர்களை லத்தியைக் காட்டி விரட்டி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அங்கு திரண்டிருந்தவர்கள் அங்கிருந்து வேகமாக ஓடி கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு, திருவள்ளூரில் சேவற்கட்டு நடத்த நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் பூலாம்வலசு சேவற்கட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என சேவல் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் போலீஸார் விரட்டியதால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.