Pongal 2023: இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. திரையரங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருவது கண்கூடாக தெரிகிறது.
பொங்கல் விடுமுறை ஏற்கெனவே, தொடங்கிவிட்டதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக திரையரங்கள் நிரம்பி வருகின்றன. இதையொட்டி, போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அடுத்த மூன்று நாள்களும் கொண்டாட்டம் நீடிக்கும். உலகப்புகழ் பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
விஜய், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாயும் கொடுத்துள்ளதால் பலரின் எதிர்பார்ப்புகளையும் இந்த பொங்கல் பண்டிகை நிறைவேற்றிவிட்டது. ஆனால், இங்கு ஒரு நடிகரின் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி வருவதை போஸ்டராக மதுரை முழுவதும் ஒட்டியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
கார்த்தி நடித்த சிறுத்தை; அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம்; ரஜினி நடித்த அண்ணாதை திரைப்படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இவர் தற்போது நடிகர் சூர்யாவை எடுத்து பெயரிடாத படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.
சூர்யா 42 என்றழைக்கப்படும் இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் தவிர இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், மதுரையை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சிலர் அப்டேட் கேட்டு நூதன முறையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
அதில் #we want surya42 update என்ற ஹேஷ்டேக் உடன், கத்தி படத்தில் விஜய் விவசாயிகளிடம் உணர்ச்சிகரமாக பேசும் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி சூர்யா ரசிகர்கள் அப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவை கட்டி பிடிப்பது போன்ற புகைப்படங்கள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. மேலும், ‘பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம். அப்டேட் தான கேட்டோம்’ என்ற வசனங்கள் அடங்கியுள்ள போஸ்டரை ஒட்டியுள்ளது நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.