மதிய உணவில் பாம்பு, நோய்வாய்பட்ட குழந்தைகள்: வைரலாகும் போட்டோஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பூமிலிருந்து அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் பாம்பு இருந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு மதிய உணவை பரிமாற பயன்படுத்தப்பட்ட பாத்திரத்தில் பாம்பு இருப்பது போன்ற பல படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மயூரேஸ்வர் பிளாக்கில் உள்ள பள்ளியில் சுமார் 30 மாணவர்கள் மதிய உணவில் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு தயாரித்த பள்ளி ஊழியர் ஒருவர், பருப்பு தால் நிரப்பப்பட்டிருந்த பெரிய பாத்திரம் ஒன்றில் பாம்பு காணப்பட்டதாகக் கூறினார். “குழந்தைகள் வாந்தி எடுக்கத் தொடங்கியதால் நாங்கள் அவர்களை ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்” என்று அவர் தெரிவித்தார். 

இந்த சம்பவம் நடந்த அன்று, இதுகுறித்து தொகுதி வளர்ச்சி அலுவலர் திபாஞ்சன் ஜனா செய்தியாளர்களிடம், “மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாக பல கிராம மக்களிடம் புகார்கள் வந்துள்ளன. தொடக்கப் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளருக்கு நான் தெரிவித்துள்ளேன்,” என்று கூறினார்.

ஒரு குழந்தை சற்று ஆபத்தான நிலையில் இருந்த நிலையில், மற்ற குழந்தைகள் சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதைப் பற்றி தகவல் அறிந்த பொதுமக்களும் குழந்தைகளின் பெற்றோரும், பள்ளியின் தலைமை ஆசிரியரை தாக்கி அவரது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

எனினும் இந்த சம்பவம் பற்றிய செய்திகளும், உணவு இருந்த பாத்திரத்தில் பாம்பின் படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஜனவரி 6 ஆம் தேதி, மேற்கு வங்க அரசு ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கு மதிய உணவில் கோழி மற்றும் பருவகால பழங்களை வழங்க முடிவு செய்தது. இதை செயல்படுத்தும் திட்டத்துக்காக அரசு ரூ. 371 கோடி ஒதுக்கியது. தற்போது பள்ளிகளில் மதிய உணவின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு சாதம், பருப்பு, காய்கறிகள், சோயாபீன் மற்றும் முட்டை வழங்கப்படுகின்றன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.