மதுரை: ஜல்லிக்கட்டு வீரருக்குக் கோயில் கட்டி வழிபட்டு வரும் மக்கள் – ஓர் ஆச்சர்யக் கதை!

ஜல்லிக்கட்டால் மரணம் அடைந்த வீரருக்குக் கோயில் கட்டி ஊர்மக்களும் ஜல்லிக்கட்டு வீரர்களும் வணங்கி வருவது மதுரை மாவட்டத்தில் ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

கோயில்

பொங்கல் நெருங்கிவிட்டால் போதும், மதுரை மக்கள் உற்சாகமாகிவிடுவார்கள், காரணம் ஜல்லிக்கட்டு! மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மாடு வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கதை உண்டு.

அப்படியொரு வீரதீரக் கதைக்குச் சொந்தக்காரர்தான் சொரிக்காம்பட்டியைச் சேர்ந்த அழகுத்தேவர். 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜல்லிக்கட்டு வீரரான அவரைத்தான் கோயில் கட்டி வணங்கி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் இங்கு வந்து வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கோயிலில் பூஜை

நாமும் ஜல்லிக்கட்டு வீரர் கோயிலைக் காண மதுரையிலிருந்து தோப்பூர் வழியாக சொரிக்காம்பட்டிக்குச் சென்றோம். ஊரின் எல்லையில் தோட்டத்தில் அமைந்துள்ளது அக்கோயில். காளையுடன் அழகுத்தேவர் நிற்பதுபோல கோயிலுக்குள் சிலை உள்ளது. அழகுத்தேவர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்தக் கோயிலை நிர்வகித்து வருகிறார்கள்.

கோயில் பூசாரியான அழகுத்தேவரிடம் பேசினோம். “அந்தக் காலத்துல பாலமேடு, அலங்காநல்லூரைப்போல பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடக்கும். அப்பவெல்லாம் இவ்வளவு பரிசு பணமெல்லாம் கொடுக்க மாட்டாங்க. மாட்டுக் கொம்புல சல்லிக்காசைக் கட்டியிருப்பாங்க. அதை எடுக்குறவன்தான் வீரன். அதை எடுப்பதில்தான் ஒவ்வொருவரும் திறமையைக் காட்டுவார்கள்.

பூசாரி அழகுத்தேவர்

நானூறு வருசத்துக்கு முந்தி இந்த ஊரை கருத்தமாயத்தேவர் என்பவர் உருவாக்கினார். அவருக்கு நான்கு மகன்கள். அதில் கடைசி மகன்தான் அழகுத்தேவர். அவர் இளவட்டமாக இருந்தபோது பல ஊர்களுக்கும் சென்று ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கி வந்தார். அதனால் அவர் திருமணம் வேண்டாமென்று விளையாட்டில்தான் ஆர்வம் காட்டினார். அவருக்கு சமயன் என்பவர் நெருக்கமான நண்பர். ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துதான் ஒவ்வொரு ஜல்லிக்கட்டுக்கும் போயிருக்காங்க.

எவ்வளவு பெரிய மாடாக இருந்தாலும், பெரிய மிட்டா மிராசுகள் வளர்த்த மாடாக இருந்தாலும் அவற்றை அழகுத்தேவர் அடக்கி வந்ததால் அவருடைய பேரு பிரபலமாயிடுச்சு. அதே நேரம் எதிரிகளும் உருவாகிட்டாங்க.

ஜல்லிக்கட்டு வீரர் சிலை

பக்கத்திலிருக்கிற கீழக்குயில்குடியில் அப்ப நடந்த ஜல்லிக்கட்டில் 26 வயதில் கலந்துகொண்ட அழகுத்தேவர், அஞ்சு மாடுகளை வரிசையா அடக்கியிருக்காரு. இதைப் பார்த்து எதிரிகளுக்கு எரிச்சல். அதனால் ஏற்கெனவே திட்டமிட்டு தவறாகப் பழக்கிய மாட்டை 6-வதாக இறக்கிவிட அழகுத்தேவருக்கு வயிற்றில் மாடு குத்திக் குடல் வெளியே சரிந்துவிட்டது. நண்பன் சமயன் துண்டை வைத்து வயிற்றை இறுக்கிக் கட்ட, அந்த வலியோடு ஆறாவது மாட்டையும் அடக்கி வெற்றி பெற்றார் அழகு.

பரிசை வாங்கியபடி பெரும் காயத்தோடு இருந்தவரை சமயன் தூக்கிக் கொண்டு ஊருக்கு வந்து சேர்த்தார். வயிற்றுக்கு வைத்தியம் பார்த்து ஓரளவு குணமாகி வந்த நிலையில், ஏற்கெனவே மாட்டை ஏவி விட்ட எதிரிகள் வைத்தியரைப்போல் வேசமிட்ட ஒருவரை இந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அழகுத்தேவருடன் நண்பர் சமயன்

அவர் அழகுத்தேவர் காயங்களுக்குச் சரியான வைத்தியம் செய்து குணப்படுத்துவதாகச் சொல்ல, அதற்கு உறவினர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆனால், அவரின் வைத்தியத்துக்குப் பிறகு காயங்கள் ஆறவில்லை. தனக்கு மரணம் நெருங்கிவிட்டதை உணர்ந்த அழகுத்தேவர் உறவினர்களிடம் ‘நான் இறந்துவிட்டால் எனக்குக் கோயில் கட்டி, அதன் மூலம் நம்ம ஊரில் ஜல்லிக்கட்டு வீரர்களை உருவாக்குங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

சொன்னதுபோலவே சில நாள்களில் அவர் மரணமடைய, அவருக்கு இங்குக் கோயில் எழுப்பப்பட்டது. இதை அவருடைய சகோதரர் வழி வந்த வம்சாவளியினர் நிர்வாகம் செய்து வருகிறோம். நான் அழகுத்தேவரின் மூத்த அண்ணனின் வம்சாவளியில் வந்தவன்.

கோயில் முன் ஊர்க்காரர்கள்

கீழக்குயில்குடியில்தான் அவருக்கு இந்த மோசமான சம்பவம் நடந்ததால், எங்கள் பரம்பரையில் வந்த யாரும் அங்கு உள்ளவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. அதே நேரம், அழகுத்தேவர் பற்றிப் பல கற்பனைக் கதைகளை சிலர் பரப்பி வருகிறார்கள்.

அதெல்லாம் பொய். இப்பவும் இப்பகுதியில் உள்ளவர்களும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குச் செல்கிறவர்களும் அழகுத்தேவரை வந்து வணங்கி திருநீறு அணிந்து செல்கிறார்கள்” என்றார்.

ஊராட்சித்தலைவர் அழகுமலை

சொரிக்காம்பட்டி ஊராட்சித் தலைவர், “உலகமே கொண்டாடும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மரணமடைந்த வீரருக்கு எங்க ஊரில் கோயில் இருப்பதும், அதற்குப் பலர் வந்து செல்வதும் எங்களுக்குப் பெருமையாக இருக்கு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.