Happy Pongal 2023: நமது வாழ்நாளில் பயிர்களின் செழிப்பான வளர்ச்சிக்கு உதவி புரிந்த சூரியனுக்கும், உழவுக்கு உதவி செய்த மாடுகளுக்கும் ஒரு நாளில் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை. ஆடி மாதத்தில் பயிர் செய்த பயிர்களை அறுவடை செய்து, அந்த புதிய நெற்கதிர்கள் மூலம் பெறப்பட்ட அரிசியை தமிழர் திருநாளான தை முதல் நாளில் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய கடவுளுக்கு படைத்தது தமிழ் மக்கள் வழிபடுவார்கள். முதல் நாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொங்கல் கொண்டாடப்படும், அதற்கு அடுத்த நாள் உழவுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, புதிய கயிறு மற்றும் மணிகள் போன்றவற்றை மாடுகளுக்கு அணிவித்து அவற்றை அலங்கரித்து வைத்து பொங்கல் வைத்து மாடுகளுக்கு ஊட்டி மகிச்சியுடன் வழிபடுவார்கள். தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் என உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த பொங்கல் பண்டிகையை தை முதல் நாளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு தீபாவளி போன்ற மற்ற பண்டிகைகளை காட்டிலும் பொங்கல் பண்டிகை தான் பிடித்தமானதாக இருக்கின்றது. பொங்கல் வருவதற்கு முன்னரே மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை சுத்தம் செய்து, வீட்டிற்கு வெள்ளை அடித்து, பொங்கலுக்கு முதல் நாளன்று வீடுகளில் மாக்கலோம் போட்டு வீட்டையே மங்களகரமாக மாற்றிவிடுவார்கள். வட மாநிலங்கள் மற்றும் இன்னும் பிற இடங்களில் பொங்கல் பண்டிகையை மஹர சங்கராந்தி என்று அழைக்கின்றனர். இந்த பொங்கல் பண்டிகை காலங்களில் மண்பானைகள், பித்தளை பொங்கல் பானைகள், அடுப்புகள், மஞ்சள் கொத்துகள், கரும்புகள் போன்றவற்றின் விற்பனை களைகட்ட தொடங்கிவிடும். வெளியூர்களில் வசிப்பவர்கள் இந்த நன்னாளில் தங்கள் இல்லங்களுக்கு வந்து மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இந்த 2023ம் ஆண்டில் ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பொங்கல் பண்டிகை வருகிறது, இன்றைய தினம் போகி பண்டிகை. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற பழமொழிக்கேற்ப இன்று மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலுள்ள பழைய பொருட்களை தீமையை எரிப்பதற்கு கருதி தீயிலிட்டு எரிப்பார்கள். இன்னும் பொங்கல் கொண்டாட சில மணி நேரங்கள் இருக்கிறது, பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகிவிட்ட நமக்கு எப்போது பொங்கல் வைக்க வேண்டும் என்கிற யோசனை இருக்கும். நாளைய தினம் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை நாங்கள் இங்கு உங்களுக்கு சொல்கிறோம், பொங்கல் வைக்க சரியான நேரம் – காலை 07.45 முதல் 08.45 வரை. வெளிநாடுகளில் இருப்பவர்கள் மற்றும் காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் சில நேரங்களை பற்றி பார்ப்போம்.
நல்ல நேரம் – காலை 07.30 மணி முதல் 08.30 வரை
மாலை 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் – காலை 10.30 முதல் 11.30 வரை
எமகண்டம் – பகல் 12 முதல் 01.30 வரை
ராகு காலம் – மாலை 04.30 முதல் 6 வரை
மேலும் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை ஆகும்.