நேபாள விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை மாநிலத்திற்கு கொண்டு வர உ.பி., முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்

லக்னோ,

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்த தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், அங்கு நிலவிய காலநிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்களில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேபாள விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மாநிலத்திற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக உ.பி., முதல்-மந்திரி யோகி ஆதியநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்த இந்திய குடிமக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.

பகவான் ஸ்ரீ ராமர் அவர்களின் புனித பாதங்களில் மறைந்த ஆத்மாக்களுக்கு இடம் கொடுக்கட்டும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

இறந்தவர்களின் உடல்களை மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.