பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் நடைபெறும் சர்வதேச வெப்பகாற்று பலூன் திருவிழாவை காண பொதுமக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து இலவசமாக அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச வெப்பகாற்று பலூன் திருவிழா நடைபெறுகிறது. இதில் பிரேசில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட டைனோசர், கரடி, கார்ட்டூன் உள்ளிட்ட வடிவிலான 10-க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
இவ்விழா காணவரும் பொதுமக்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.100, ரூ.499, ரூ.999 என வசூலிக்கப்படுகிறது. கடந்த கரோனா ஊரடங்கு காலம் தவிர்த்து இதுவரை நடத்தப்பட்ட பலூன் திருவிழாக்களில் பொதுமக்களிடம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படாத சூழலில், இந்தாண்டு புதிதாக நுழைவுக்கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழாவில் ஏழை எளிய மக்கள் நுழைவுக் கட்டணம் செலுத்திப் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்காக சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழாவில் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து சாமானிய மக்களுக்கும் பார்க்கும் வகையில் இலவசமாக காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆச்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில் அப்பகுதி மக்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.